Tuesday, May 23, 2017

கங்கைகொண்ட சோழபுரம்

விழுப்புரத்தில் தங்கி இருந்ததால் பக்கத்தில் எங்கயாவது சென்று வரலாம் என்று திட்டம்  போட்டதில், சமீபத்தில் குடமுழுக்கு நடைபெற்றதாலும் ரொம்ப நாளாக போகவேண்டும் என்று வீட்டில் சொன்னதால் கங்கை கொண்ட சோழபுரம் செல்லலாம் என்று முடிவு செய்து கிளம்பினோம்.

விழுப்புரம் டு கங்கைகொண்டசோழபுரம் சரியாக 100 கிமீ. 2pm க்கு கெளம்பி அரசூர் வரை நான்கு வழி சாலையாகவும் பின்பு இருவழி சாலை வழியாக பண்ருட்டி, நெய்வேலி, சே.தோப்பு,
மீன்சுருட்டி வழியாக 2.30மணி நேர பயணத்தில் கங்கைகொண்டசோழபுரம் அடையலாம்

சென்னை-ல் இருந்து வருபவர்கள் விக்கிரவாண்டி டோல்கே தாண்டியவுடன் இடப்புறம் செல்லும் தஞ்சாவூர், கும்பகோணம் சாலை வழியாக செல்ல வேண்டும். குறுகிய சாலையாக  இருப்பதால் குறைவான வேகத்தில் தான் செல்ல முடியும்.

இராசேந்திர சோழன் சோழர்களின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவரும் தஞ்சை பெரிய கோவிலை கட்டியவருமான இராஜராஜ சோழனின் மகனும், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவருமாவார்.

விஜயாலய சோழன் காலத்தில் தொடங்கிய சோழப் பேரரசு இராஜேந்திரன் காலத்தில் அதன் பொற்காலத்தை அடைந்தது. சோழ மன்னர்களில் இராஜேந்திரனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற பெருமை வாய்ந்தவர். தன்னுடைய ஆட்சிக் காலத்தில் இராஜேந்திர சோழன் ஏற்கனவே பரந்து விரிந்திருந்த சோழப் பேரரசின் பரப்பை மேலும் விரிவுபடுத்தினார்.

இராஜேந்திரன் ஆட்சிக்காலத்தில் சோழநாடு, இலங்கை, மாலத்தீவு, கடாரம், ஸ்ரீவிஜயம், மலேயா(சிங்கப்பூர் - மலேசியா), சுமத்ரா ஆகியவற்றை உள்ளடக்கிய மிகப்பெரிய நிலப்பரப்பாக இருந்தது. இராஜேந்திர சோழனே முதன் முதலில் அயல்நாட்டிற்குப் பெரும் படை எடுத்துச் சென்ற முதல் இந்திய மன்னன் ஆவார். மகிபாலனை வென்று வங்காள தேசத்தை சோழநாட்டுடன் இணைத்தவர்; அதன் வெற்றியைச் சிறப்பிக்கவே கங்கை கொண்ட சோழபுரம் என்னும் புதிய தலைநகரத்தை உருவாக்கித் தன்னுடைய ஆட்சியை அங்கிருந்து நிர்வகித்தார். அங்கே சிவபெருமானுக்காக இராஜேந்திரன் கட்டிய கற்கோயில் சோழர் காலக் கட்டிடக்கலைக்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இன்றளவும் விளங்கி வருகிறது.  இந்தயாவில் வாயு கடவுளுக்கு கட்டப்பட்ட ஒரே கோயிலான, ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள காலஹஸ்தி கோயில் இராசேந்திர சோழனால் கட்டப்பட்டது.

கங்கைகொண்ட சோழபுரம் அரியலூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிறிய ஊர்.  இந்த கோவிலை ஐக்கிய நாடுகள் அமைப்பு உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது.

கங்கைகொண்ட சோழபுரம் உருவாகும் முன் அந்த இடம்  வன்னியபுரம் என்ற சிற்றூராக இருந்தது. வன்னிமரங்களுக்கு சிறப்புபெற்ற வன்னி மரக் காடாக விளங்கியது. இந்த ஊரில் அக்காலத்திலிருந்தே நிறைய வன்னி மரங்கள் இருந்தற்கு சான்றாக இன்றும் தல விருட்சமாக, கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் வன்னி மரம் உள்ளது. மேலும் வன்னிய சமூகத்தினர் அதிகம் வாழும் பகுதியாகவும் உள்ளது.

மேலை, கீழைச் சாளுக்கிய தேசங்களிலும் ஈழம் பாண்டிய சேர தேசங்களை வெற்றிக் கொண்ட இராஜேந்திர சோழன் 1019இல் கங்கை வரை படையெடுத்து சென்று வெற்றியும் கண்டார். அதனால் கங்கை கொண்ட சோழன் என்ற பட்டமும் பெற்றார். அதன் நினைவாக 1023இல் கங்கை கொண்ட சோழபுரம் எனும் புதிய தலைநகரை உருவாக்கினார்.

இங்கு சிவபெருமானுக்கு கங்கைகொண்ட சோழீசுவரர் கோயில் எனும் மாபெரும் கோவிலை அமைத்தார். கங்கை வரை பெற்ற வெற்றியின் நினைவாக கங்கை கொண்ட சோழப் பேரேரி அமைக்கப்பட்டது. இதற்கு சோழகங்கம் என்றும் பெயர் உண்டு. கங்கை கொண்ட சோழபுரம் பதிமூன்றாம் நூற்றாண்டு வரை சோழர்களின் தலைநகரமாக விளங்கியது.

நாங்கள் சென்றது மாலை நேரமென்பதால் வெயில் இல்லமல் சற்று நிம்மதியாக சுற்றி பார்க்க முடிந்தது. கோவிலை சுற்றி புல்தரை மற்றும் செடிகள் நன்றாக பராமரிக்கின்றனர். கோவிலும் சுத்தமா உள்ளது, இதற்கு காரணம் இங்கு அதிகம் மக்கள் வருவது இல்லை. கோவிலில் முதலில் நம்மை வரவேற்பது கோபுரம் இல்லாத ஒரு நுழைவு வாயில்தான்

 இதுமாதிரி கட்டிமுடிக்கப்படாமல் விட்ட இடங்கள்கூட ஒருவகையில் அழகுதான் (குதுப்மினார் சுற்றி உள்ள இடங்கள் மாதிரி).


மேலும் ஒரு மண்டபம் போன்ற அமைப்பும், ஒரு துணைக்கோவிலின் அடித்தளத்தை இங்கு காணலாம். தஞ்சையில் உள்ளது போன்ற நந்தி மற்றும் பெரிய லிங்கமும் உள்ளது.

கோவில் கோபுரம் தஞ்சை கோவிலின் அமைப்பை பிரதிபலிதாலும் இந்த கோவிலை பார்க்கும் போது நமக்கு சிறு பிரமிப்பு ஏற்படாமல் இல்லை. சந்நிதியின்  உள்ள துவாரபாலகர் சிலைகள் அருமையாக உள்ளது, நுணுக்கமான வேலைப்பாடு இல்லாமல் இருந்தாலும் இந்த சிலைகளின் உயர அகலம் நம்மை கண்டிப்பாக வாய்பிளக்க வைக்கும்.

இதேபோல மேலும் இரு சிலைகள் கோவிலின் பக்கவாட்டு வழியிலும் உள்ளன. ஏனோ பெரும்பான்மை சோழர் கால சிற்பங்களில் அவ்வளவு துல்லியம் இருப்பதில்லை. இவர்கள் கட்டிடக்கலைக்கு மட்டும் அதிக  முக்கியத்துவம் கொடுத்துள்ளதை பார்க்கலாம்.

கோவிலின் வலப்பக்கம் ஒரு சிங்கமுக வாயிலும் இந்த வழியாக இறங்கி சென்றால் அருகில் இருக்கும் கிணற்றை அடைவது போலவும் அமைத்துள்ளார்கள். அங்கு சிலர் தவறாக அதை தஞ்சாவூர் செல்லும் சுரங்கம் என்று சொல்லுவதை கேட்டேன். வேக வேகமாக ஓடி ஓடி பார்க்காமல் நிதானமாக கட்டிட அமைப்பையும் ஆயிரம் வயது கொண்ட சிற்பங்களையும் காணும்போது இந்தனை நூற்றாண்டுகளாக இந்த சிற்பங்கள் எத்தனை மனிதர்களை, காலநிலைகளை, எத்தனை கதைகளை அறிந்திருக்கும் என்னும் கேள்வி எழுகிறது.

நேரமிருந்தால் 40 கிமீ தூரத்தில் உள்ள தாராசுரம் கோவிலின் அழகையும் காணலாம். நாங்கள் லேட்டா கிளம்பியதால் தாராசுரம் செல்லாமல் சோழபுரத்தோடு திரும்பினோம். இதற்கு முன்பே சிலமுறை இங்கு நான் சென்றிருந்தாலும் அந்தி சாயும் வேலையிலும் நிலஒளியுலும் சோழனின் பெருமையை பறைசாற்றும் இந்த அற்புதத்தை நான்  கண்டது போல இன்னும் பல சந்ததிகள் கண்டு வியக்கப்போவது உண்மை...



No comments:

Post a Comment