Thursday, March 2, 2017

Roof Farm-9

கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தின் மேற்கூரையில் 8 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 750 செடி, கொடிப் பயிர்களுடன் பசுமைக் கட்டி நிற்கும் அலுவலக மாடித்தோட்டம் குறித்து கடந்த இதழில் பதிவு செய்திருந்தோம்.

அந்தத்தோட்டம் அமைய, காரணமாக இருந்தவர், கோயம்புத்தூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு முகமையின் திட்ட இயக்குநர் முருகன். அலுவலகக் கட்டடங்களில் தோட்டம் அமைப்பது குறித்து, முருகன் சொன்ன தகவல்கள் இங்கே...
‘‘நான் வேலூரில் வேலை பார்த்தபோது, திடக்கழிவு மேலாண்மை சிறப்பாக நடைபெற்றது. அதில் உற்பத்தி செய்யப்படும் உரங்களை விவசாயிகளுக்குக் கொடுத்தது போக, மீதமுள்ளவற்றை என்ன செய்யலாம் என்று யோசித்தோம். அப்போது உதித்ததுதான் வீட்டுத் தோட்டம் அமைக்கும் எண்ணம். அது மக்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றது. கோயம்புத்தூருக்கு மாறுதலாகி வந்தபிறகு, 2012-ம் ஆண்டு சூலூர் யூனியன் அலுவலகத்தின் புதிய கட்டடம் திறக்கப்பட்டது. அதன் மொட்டை மாடியில் இருந்த 8 ஆயிரம் சதுரடி இடத்தில் தோட்டம் அமைக்கும் எண்ணம் தோன்றவே... மாவட்ட ஆட்சியர் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை செய்து, சுமார் 50 ஆயிரம் ரூபாய் செலவில் இந்த மாடித்தோட்டத்தை, சேர்மன் ‘மாதப்பூர்’ பாலுவுடன் சேர்ந்து அமைத்தோம்.
வீட்டுத்தோட்ட வல்லுநர் ‘வேலூர்’ சீனிவாசனை வரவழைத்து மாடித்தோட்டம் அமைக்கும் பொறுப்பை ஒப்படைத்தோம்.
தொடர் பராமரிப்பு செய்வதற்காக சுய உதவிக்குழுப் பெண்களுக்கு இடுபொருட்கள், மூலிகைப் பூச்சிவிரட்டித் தயாரிப்பு, பராமரிப்பு உள்ளிட்ட பயிற்சிகளைக் கொடுத்தோம். நான் அடிப்படையில் எம்.எஸ்.சி அக்ரி பட்டதாரி. எனக்குள் இருக்கும் விவசாய ஆர்வமும் கூட இந்த மாடித்தோட்டம் அமைக்க ஒரு காரணம்’’ என்ற முருகன், அங்கிருந்த பெண்கள் பக்கம் திரும்பி, ‘‘மூணு அறுவடை முடிஞ்சதும், செடிகள் இருக்கிற இந்தக் கூடைகள்ல மண்ணை மாத்தணும். மண் 10 கிலோ, தொழுஎரு 10 கிலோ, தென்னை நார்க்கழிவு 10 கிலோ, மண்புழு உரம் 5 கிலோ, ஆட்டு எரு 5 கிலோ இதையெல்லாம் ஒண்ணா கலந்து நிரப்பணும். கூடவே, கொஞ்சம் உயிர் உரமான, அசோஸ்பைரில்லம் சேர்த்துக்கணும்” என ஆலோசனை சொன்னார்.
மீண்டும் நம்மிடம் பேசத் தொடங்கிய முருகன், “மூங்கில் கூடைகளில் செடிகளை வளர்க்கும் திட்டத்தை இங்கு செயல்படுத்தி வருகிறோம். குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் வரை கூடைகளைப் பயன்படுத்தலாம். வெயில், மழை அனைத்தையும் தாங்கி நிற்கும். யாரும் எளிதில் கையாளலாம். புதுக்கூடை வாங்கி வந்தவுடன், சாணம் கொண்டு முழுமையாக மெழுகி வெயிலில் காயவைத்த பிறகே மண் நிரப்பி பயன்படுத்துகிறோம். அப்போதுதான் கூடை முறிந்து போகாமல் இருக்கும்.
இனி, ஒன்றியம்தோறும் தோட்டம்!
இந்த ஆபீஸ் தோட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தகுந்த சூழல் உள்ள மற்ற உள்ளாட்சி அலுவலகங்களிலும் இது போன்ற தோட்டம் அமைக்க இருக்கிறோம். இன்னும் சில மாதங்களில் சூலூர் யூனியன் அலுவலக வளாகத்தில் காய்கறி அங்காடி ஒன்றையும் அமைக்க இருக்கிறோம். இங்கு விளையும் காய்கறிகள் போக, பக்கத்து ஊர்களில் விளையும் காய்கறிகளையும் வரவழைத்து சுய உதவிக்குழுப் பெண்கள் மூலம் விற்பனை செய்யும் எண்ணமும் இருக்கிறது. ஆனால், அது இயற்கை இடுபொருட்களைப் பயன்படுத்தி விளைந்த காய்கறிகளாக இருக்க வேண்டும் என்பது கட்டாயம்.
மாதம் 50 பெண்களுக்கு இயற்கை வழி மாடித்தோட்டம் அமைப்பது குறித்த பயிற்சி அளிக்கும் திட்டமும் உள்ளது. அந்த பெண்கள் உற்பத்தி செய்யும் காய்கறிகளை அங்கன்வாடி மையங்களுக்குக் கொடுத்து எதிர்கால சந்ததியினருக்கும் விஷமில்லா உணவைக் கொடுக்க இருக்கிறோம்.
மாடித்தோட்டத்தில் ‘ஒருங்கிணைந்த மாடித்தோட்டம்’ என்ற புது முயற்சியையும் செயல்படுத்த இருக்கிறோம். வீட்டில் மாடித்தோட்டம் அமைப்பவர்கள் ஓரே இடத்தில் பலவித செடிகளை வளர்க்கிறார்கள். ஆனால், ஒருங்கிணைந்த மாடித்தோட்டத்தில்... ஒரு வீட்டு மாடியில் ஒரே ஒரு பயிர் என ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு பயிரை வளர்ப்பார்கள். இப்படி சாகுபடி செய்யும் போது விளைச்சல் அதிகரித்து, நோய்த்தாக்குதல் குறைகிறது. இப்படி உற்பத்தி செய்பவர்கள் தங்களுக்குள் பண்டமாற்று முறையில் காய்கறிகளைப் பகிர்ந்து கொள்ளலாம், மீதமுள்ளதை விற்பனையும் செய்யலாம். வீட்டுத்தோட்டத்தில் நல்ல மகசூல் கிடைக்க தரமான விதைகளைத் தேர்ந்தெடுத்து நடவு செய்ய வேண்டும். பல காய்களின் விதையை நமது மாடித்தோட்ட செடிகளில் இருந்தே சேகரித்துக் கொள்ளலாம்.
சொக்க வைக்கும் சோலார்!

இந்த அலுவலகத்துக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. மாதிரி மாடித்தோட்டம் அமைந்திருப்பது போல, மாதிரி சோலார் மின்சாரமும் இங்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. 7 ஆயிரம் வாட்ஸ் திறன் கொண்ட சோலார் பேனல்களை அமைத்து அலுவலகப் பயன்பாட்டுக்குத் தேவையான மின்சாரத்தின் ஒரு பகுதியை உற்பத்திச் செய்கிறோம். இதன் மூலம் இந்த அலுவலகத்தின் மாதாந்திர மின்கட்டணம் வெகுவாகக் குறைந்துள்ளது’’ என்ற முருகன்,
‘‘மாடித்தோட்டம், சோலார் மின் உற்பத்தி, திடக்கழிவு மேலாண்மை போன்ற அரசின் பயனுள்ள திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பவர்கள் அதிகாரிகளும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளும்தான். ஆர்வம் இன்மை காரணமாக சிலர் இந்தத் திட்டங்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதால், அது யாருக்கும் பயனின்றி வீணாகிப்போகிறது. ஒரு கட்டத்தில் ‘திட்டமே தோல்வி’ என்கிற தோற்றம் உருவாகிவிடுகிறது. அதனால் திட்டம் நிறுத்தப்பட்டு மற்ற ஊர்களுக்கு கிடைக்கவேண்டிய வாய்ப்பும் நழுவிப்போகிறது. எனவே, அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் வேலை செய்தால், எல்லா திட்டமும் வெற்றிதான்’’ என்கிற உண்மையை உரக்கச் சொன்னார்.

(Thanks Vikatan)

No comments:

Post a Comment