Tuesday, March 7, 2017

Roof Farm-17

நிழல்வலைக்குள் கீரைகள்... மூலிகைகள்... காய்கறிகள்!


குடும்பத்துக்குத் தேவையான நஞ்சில்லா காய்கறிகளை உற்பத்தி செய்துகொள்ளும் மாடித்தோட்ட விவசாயம், குடும்பத்தலைவிகள் பலரிடமும் பிரபலமாகி வருகிறது. அந்த வகையில், தங்கள் வீட்டில் அமைத்துள்ள மாடித்தோட்டம் குறித்து, நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார், கோயம்புத்தூர், சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஆசிரியை உஷாபானு.

வழிகாட்டிய பயிற்சி!
“நான், ‘அவள் விகட’னின் தீவிர வாசகி. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ‘அவள் விகடன், பசுமை விகடன் சேர்ந்து கோயம்புத்தூர்ல, நடத்தின வீட்டுத்தோட்ட கருத்தரங்கத்துல கலந்துக்கிட்டேன். அங்கதான், வீட்டுத்தோட்ட அமைப்பு, இடுபொருள் தயாரிப்பு, குழித்தட்டு நாற்றங்கால் உற்பத்தி, மூலிகைப் பூச்சிவிரட்டி...னு பல விஷயங்களைத் தெரிஞ்சுக்கிட்டேன். அதோட, ஏற்கெனவே வெற்றிகரமா  வீட்டுத்தோட்டம் அமைச்சிருக்குற சிலரைப் பார்த்தும் விவரங்களைத் தெரிஞ்சுக்கிட்டேன். அதுக்கப்பறம், மொட்டை மாடியில் தோட்டம் போடுவதற்கான வேலைகளை ஆரம்பிச்சேன்” என்று முன்னுரை கொடுத்த உஷாபானு, தொடர்ந்தார்.
எல்லாமே புதுசுதான்!
‘‘உபயோகப்படுத்தின பிளாஸ்டிக் பக்கெட்டுகள், கிரீஸ் டப்பாக்கள், பழைய பீப்பாய்கள், மரப்பெட்டிகள்னு பயன்படுத்தி நிறைய பேர், செடிகளை வளர்க்கிறாங்க. அதெல்லாம் செலவு குறைஞ்ச முறைகள்னாலும் அந்த மாதிரி பொருட்களைத் தேடி அலைய முடியலை. அதனால, பிளாஸ்டிக் தொட்டிகள், பைகளை கடையில புதுசா வாங்கி அதுலதான் காய்கறிகளை வளர்க்கிறேன்.
பலமுனைகளில் பாதுகாப்பு தரும் நிழல் வலை!
என்னோட மாடித்தோட்டத்தின் பரப்பளவு 500 சதுர அடி. முழுக்க நிழல் வலைப்பந்தல் அமைச்சு அதுக்குள்ளாறதான் தொட்டிகளை வெச்சிருக்கேன். நிழல் வலைக்குள்ளாற இருக்கிறதால, அதிக வெயில், அதிகப் பனி ரெண்டுமே செடிகளைப் பாதிக்கிறதில்லை. சீரான சீதோஷ்ண நிலை, செடிகளுக்குக் கிடைச்சிடுது. அதில்லாம பழங்களைக் கொத்தித் தின்ன வர்ற பறவைகளும் உள்ள வர முடியாது.
சுழற்சி முறையில் நடவு... ஆண்டு முழுவதும் அறுவடை!
மொத்தம் 120 தொட்டி மற்றும் பைகள் இருக்கு. ஒரே சமயத்துல எல்லா தொட்டிகளிலும் காய்கறிகளை வளர்க்காம, சுழற்சி முறையில வளர்த்துக்கிட்டு வர்றேன். அதனால வருஷம் முழுசும் எனக்குத் தேவையான காய்கறிகள் கிடைச்சுக்கிட்டிருக்கு. தக்காளி, கத்திரி, மிளகாய்ச் செடிகளை மூணு, மூணு தொட்டிகள்ல வெச்சிருக்கேன். வெண்டை, சுண்டைக்காய் ரெண்டையும் அஞ்சு அஞ்சு தொட்டிகள்ல வளர்க்கிறேன்.

ஏழு தொட்டிகள்ல காலிஃபிளவர் நடவு செய்திருக்கேன். நிழல் வலைக்குள்ள சிறப்பான பராமரிப்பும் இருக்கிறதால மலைப்பயிரான காலிஃபிளவர் கூட நல்லா வளருது. வழக்கமா இதுக்கு அதிக ரசாயனம் கொடுப்பாங்க. ஆனா, இங்க இயற்கை முறையில வளர்த்திருக்கோம். அடுத்து கேரட்டும் விதைக்கலாம்னு இருக்கோம். கீரையும், சூப் பயன்பாட்டுக்காக ஒரு முருங்கைச் செடியும் இருக்கு. இலைகளை மட்டும் அறுவடை செய்துட்டு இருக்கேன். அதுபோக, பாலக் கீரை, மணத்தக்காளி, தண்டுக்கீரை, புளிச்சக்கீரைகளை அஞ்சு அஞ்சு பைகள்ல போட்டிருக்கேன்.
மூலிகைகளும் தொட்டியில்!
5 தொட்டிகள்ல முடக்கத்தான் செடிகள்; 4 தொட்டிகள்ல இன்சுலின் செடிகள் இருக்கு. முடக்கத்தான் கீரையை தோசை மாவில் கலந்து சாப்பிட்டா மூட்டுவலிகள் குணமாயிடும். இன்சுலின் செடி இன்சுலின் சுரப்புக் குறைபாட்டுக்கு நல்ல மருந்து. அப்பப்போ நேரம் கிடைக்கிறப்போ கொஞ்சம் கொஞ்சமா தோட்டத்தை விரிவுபடுத்திக்கிட்டிருக்கேன்!
குழந்தைகளின் விளையாட்டுக்களம்!
வீட்டுத்தோட்டம் அமைக்கிறதுல குழந்தைகள் உளவியலும் இருக்குது. டி.வி பார்க்கிறது தெருவில் இறங்கி விளையாடுறதுனு பொழுதைக்கழிக்கும் குழந்தைகளை விளையாட்டுப் போலவே வீட்டுத்தோட்டப் வேலைகளைச் செய்ய வைக்கலாம். பூவாளியில் தண்ணீர்த் தெளிப்பு, காய்ப் பறிப்பு, மூலிகைப் பூச்சிவிரட்டித் தயாரிப்பு மாதிரியான பணிகளை விளையாட்டுப் போட்டியாய் செய்ய வெச்சா ஆர்வமா செய்வாங்க. எங்க வீட்டுக்குழந்தைகளுக்கு விடுமுறை நாள்னா, மாடித்தோட்டம்தான் விளையாட்டுக்களம். அதனால, எங்க குழந்தைகளுக்கு காய்கறிகள், கீரைகள் பத்தி அடையாளம் தெரியுது. அதோட இயற்கை விவசாயம் பத்தியும் தெரிஞ்சு வெச்சிருக்காங்க” என்று சொல்லி தங்கள் சுட்டிகளை அறிமுகப்படுத்தினார்.
ஆகாஷ், ஆல்வின், ஷிவானி மற்றும் ஆஷிகா ஆகிய நான்கு குட்டி விவசாயிகள்தான் விடுமுறை நாட்களில் மாடித்தோட்டப் பராமரிப்பாளர்கள். மும்முரமாக தொட்டிகளை இடம் மாற்றி வைத்துக் கொண்டிருந்த அந்த நான்கு சுட்டிகளும், அதை ஆமோதிப்பது போல புன்னகை ஒன்றை வீசிவிட்டு, தங்கள் பணியில் முனைப்பானார்கள்.
நிறைவாகப் பேசிய உஷாபானு, “500 சதுர அடியில் இந்த மாடித்தோட்டம் அமைக்க 20 ஆயிரம் ரூபாய் செலவு பிடிச்சது. வீட்டுக் காய்கறிச் செலவுல இப்ப கணிசமானத் தொகை மீதமாகுது. நமக்குத் தேவையான கீரை, காய்கறிகள் விஷமில்லாமல் கிடைக்குது. குழந்தைகளுக்குள்ள அறிவுப்பூர்வமான சிந்தனை உருவாகுது. சுத்தம், சுகாதாரம், மகிழ்ச்சி, சிக்கனம்னு பல விஷயங்களையும் பிரதானமா கொடுக்கும் இந்த வீட்டுத்தோட்டம் ஒரு பரிசுத்த விவசாயம்தான்” என்று சிலாகித்தார்.

மாடித்தோட்டம் அமையுங்கள்... இப்படி!
தென்னை நார்க்கழிவு, மண்புழு உரம் ஆகிய இரண்டையும் கலந்து வைத்துக்கொண்டு இந்தக் கலவையில் ஒரு பங்கு, மணல் அரைப்பங்கு என எடுத்து தொட்டிகளில் நிரப்ப வேண்டும். அடுத்ததாக, மண்புழு உரம், அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா மற்றும் சூடோமோனஸ் ஆகியவற்றை சம அளவில் எடுத்துக் கலந்து இக்கலவையில் கொஞ்சம் தொட்டிகளில் சேர்த்து விதை அல்லது நாற்றை நடவு செய்ய வேண்டும்.
குழித்தட்டில் நாற்றுகள்!
கீரைகள், வெண்டை, அவரை, பாகல், புடலை, பீர்க்கன் போன்ற பயிர்களை நேரடியாக விதைக்கலாம்.  கத்திரி, மிளகாய், தக்காளி மற்றும் காலிஃபிளவர்
உள்ளிட்ட செடிகளை நாற்று மூலம்தான் நடவு செய்ய வேண்டும். இவற்றை குழித்தட்டில் விதைத்து நாற்றாக வளர்த்துக் கொள்ளலாம். தென்னை நார்க்கழிவு, மண்புழு உரம், வளமான மண் இவை மூன்றையும் சரி சமமாகக் கலந்து குழித்தட்டுகளில் நிரப்பி... குழிக்கு ஒரு விதை என விதைக்க வேண்டும். தினமும் லேசான பூவாளிப்பாசனம் செய்ய வேண்டும். அவ்வப்போது களைகளை அகற்றி வர வேண்டும். நடவு செய்த ஒரு வாரம் கழித்து செறிவூட்டம் செய்யப்பட்ட மண்புழு உரத்தைத் தூவி விட வேண்டும். 20 முதல் 22 நாட்களில் நாற்றுகள் தயாராகிவிடும். கத்திரி நாற்றுகளை மட்டும் 30 முதல்  35 நாட்கள் வளர்த்து நடவு செய்ய வேண்டும்.

காய்ச்சலும் பாய்ச்சலுமாக தண்ணீர்...
தொட்டிகளில் உள்ள அனைத்துச் செடிகளுக்கும் காய்ச்சலும் பாய்ச்சலுமாகத்தான் பூவாளி மூலம் தண்ணீர் கொடுக்க வேண்டும். மழை பெய்யும் நாட்களில் தண்ணீர் தெளிக்க வேண்டியதில்லை. தொட்டிகளில் தண்ணீர் தேங்கக்கூடாது. தொட்டிகளில் முளைக்கும் களைகளை அவ்வப்போது அகற்றி வர வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை, ஒவ்வொரு செடிக்கும் ஒரு கைப்பிடி மண்புழு உரம், கால் லிட்டர் பஞ்சகவ்யா என மேலுரமாகக் கொடுக்க வேண்டும். வனக்கல்லூரி விஞ்ஞானிகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ‘ட்ரீ பால்’ மற்றும் ‘ட்ரீ ஆக்ட்’ ஆகிய இரண்டு இயற்கைப் பூச்சிவிரட்டிகள் மற்றும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் கரைசலையும் தேவைப்படும்போது  செடிகளுக்குத் தெளிக்கலாம்.


No comments:

Post a Comment