Tuesday, March 7, 2017

Roof Farm-15

‘‘வளரிளம் பருவத்துக் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு கொடுப்பது மிக முக்கியம். அதிலும் நார்ச்சத்து அதிகம் கொண்ட கீரை வகைகளில் ஒன்றாவது அவர்களின் அன்றாட உணவுப் பட்டியலில் இருந்தாக வேண்டியது அவசியம்’’ என்கிறார், தனது மருத்துவமனை மாடியில், ‘தொட்டிப் பாத்திகள்’ அமைத்து பலவிதமான கீரைகளை வளர்த்து வரும் மகப்பேறு மருத்துவர் மங்கையர்க்கரசி. திருப்பூர் மாவட்டம், காங்கேயம் நகரில் உள்ளது இவரது மருத்துவமனை.
‘‘20 வருஷமா இங்க ஆஸ்பத்திரி நடத்திக்கிட்டு வர்றேன். ஆயிரக்கணக்கான பெண்களுக்கு பிரசவம் பார்த்திருக்கேன். எந்தப் பெண்ணும் சுகப்பிரசவம் ஆகணும்னுதான் ஆசைப்படுவாங்க. ஆனால் இப்ப, சுகப்பிரசவம் குறைஞ்சு அறுவை சிகிச்சை மூலமாகத்தான் பெரும்பாலான பிரசவங்கள் நடக்குது. இதுக்குக் காரணம், கர்ப்பிணிப் பெண்களோட உடம்புல போதுமான சத்துக்கள் இல்லாம இருப்பதுதான். இதுனால, பிறக்கும் குழந்தைகள் எடை குறைவா பிறக்குது. என்கிட்ட சிகிச்சைக்கு வர்ற கர்ப்பிணிப் பொண்ணுங்ககிட்ட சத்தான உணவைச் சாப்பிடுங்கனு ஆலோசனை சொல்றதை வழக்கமா வெச்சிருக்கேன். நாம் ஆலோசனை சொல்றதோட நிறுத்திக்கக்கூடாது. அதுக்கான தீர்வையும் சொல்லணும்னு முடிவு செய்துதான் இந்த மாடித்தோட்டத்தை அமைச்சேன்” என்ற மங்கையர்க்கரசி தொடர்ந்தார்.

“சிமெண்ட் தொட்டிகள் அமைச்சு, அதில் செம்மண், ஆட்டு எரு கலந்து 5 வகை கீரைகளை வளர்த்துக்கிட்டு வர்றேன். 30 நாட்கள்ல அறுவடைக்கு வரக்கூடிய சிறுகீரை, அரைக்கீரை, செங்கீரை, பாலக்கீரைகளோட 40 நாட்கள்ல மகசூல் தரக்கூடிய கொத்தமல்லித்தழையும் விதைச்சிருக்கேன். அடியுரமா, ஆட்டு எரு கொடுக்கிறதால, மேலுரம் எதுவும் கொடுக்கிறதில்லை. விதைச்ச 10-ம் நாள் பஞ்சகவ்யா கரைசலை 10 லிட்டர் தண்ணிக்கு 200 மில்லினு கலந்து தெளிக்கிறோம். எந்த நோய் தாக்குதலும் இல்லாமல் கீரைகள் வளர இந்தப் பராமரிப்பே போதுமானதா இருக்கு. எங்கள் வீட்டுத்தேவைக்குப் போக மீதியை மருத்துவமனைப் பணியாளர்களுக்கு கொடுத்துடுறோம். அதுபோக, காலை, மாலை நேரங்கள்ல நடைபயிற்சி செய்யுற கர்ப்பிணிப் பெண்களை அழைச்சுக்கிட்டு வந்து கீரைப் பாத்திகளைக் காட்டி, மருத்துவ குணங்களை விளக்கி விழிப்பு உணர்வு கொடுக்கிறேன். கர்ப்பிணிப் பெண்கள் தினமும் மதிய உணவில் ஒரு கீரை வகைப் பொரியலை எடுத்துக்கணும். சாதத்தை கீரைப் பொரியலுடன் பிசைந்து சாப்பிடுவது மிகவும் நல்லது. இதனால், ரத்தசோகை நோயைக் கட்டுபடுத்தும் இரும்புச்சத்து கிடைக்கும், குழந்தை போதிய எடையுடன் வளரும். மூச்சுத்திணறல், மலச்சிக்கல் போன்ற உபாதைகளைத் தடுக்கலாம்’’ என்ற மங்கையர்க்கரசி நிறைவாக,

சகாயமான விலையில் கிடைக்கும் சத்தான உணவு!
‘‘சிறிய அளவிலான தோட்டம் கண்டிப்பாக ஒவ்வொரு வீட்டிலும் இருக்கணும். அதிக இடவசதி இல்லாதவங்க ஒரே ஒரு முருங்கைச்செடியை மட்டும் வளர்த்தா கூடப் போதும். முருங்கைக் கீரை, பூ, காய் அனைத்திலும் உடலுக்குத் தேவையான அத்தனைச் சத்துக்களும் இருக்குது. வளரிளம் குழந்தைகளுக்குத் தொடர்ந்து கீரை உணவு கொடுத்து வந்தால் மலச்சிக்கல் நீங்கும். ரத்த அணுக்கள் பெருகும். கண்பார்வை தெளிவாகும். மூளை சுறுசுறுப்படையும்“ என்றார்.

மூன்று பருவங்கள்... தக்க பக்குவங்கள்!
மாடித்தோட்டத்தில் தொட்டிகள் அமைப்பது பற்றி பேசிய மங்கையர்க்கரசி, ‘‘குறுகிய நாளில் அறுவடைக்கு வரக்கூடிய கீரை வகைகளை அதிக அளவில் உற்பத்தி செய்ய வேண்டும் என்றால், அதற்கு பாத்தி முறை சாகுபடிதான் சரிப்பட்டு வரும். மொட்டை மாடி கைப்பிடிச் சுவரை ஒட்டி 4 அடி அகலத்தில் ஒரு அடியுரம் கொண்ட வரப்புச் சுவர் ஒன்றை ஹாலோபிரிக்ஸ் கற்களைப் பயன்படுத்தி அமைத்துக் கொள்ள வேண்டும். நமது வசதிக்கு ஏற்றவாறு நீளத்தை வைத்துக் கொள்ளலாம் (இவர் அமைத்துள்ள தொட்டியின் நீளம் 35 அடி. அகலம் 4 அடி). தொட்டியின் சுவர்களில் நீர் கசியாதபடி சிமெண்ட் பூச வேண்டும்.
தொட்டியில் கால் அடி உயரத்துக்கு சலித்த மணலைக் கொட்டி பரப்பி விட வேண்டும். அடுத்து அரை அடி உயரத்துக்கு கல் கட்டிகள் இல்லாத வளமான செம்மண்ணைக் கொட்டி ஒரே சீராகப் பரப்பி விட வேண்டும். ஆட்டு எரு, தொழுவுரம் இரண்டையும் சரி சமமாகக் கலந்து அதில், 25 கிலோ மண்புழு உரம், ஒரு கிலோ உயிர் உரம் ஆகியவற்றைக் கொட்டி செம்மண் மீது பரப்பி... பாத்தி நிறைய சொதசொதப்பாக தண்ணீர் விட வேண்டும். இரண்டு நாட்களில் தண்ணீர் சுண்டிப்போய் மண் காய்ந்து விடும்.
இந்தச் சமயத்தில் கீரை விதைகளை பாத்திகளில் தூவி விட்டு, உடனே முள்கொத்து கொண்டு உழவு செய்வது போல ஒரே ஒரு முறை நீளவாக்கில் கீறி விடவேண்டும். இப்படி செய்வதின் மூலம் தூவிய விதைகளை மண் மூடிவிடும். தொடர்ந்து பூவாளி மூலம் லேசாக நீர் தெளிக்க வேண்டும். விதைத்த 5-ம் நாளில் கீரைகள் முளைத்து வரத்தொடங்கும். அவ்வப்போது களைகளைக் கைகளால் பிடுங்கி அப்புறப்படுத்த வேண்டும். தொட்டிப்பாத்தி முழுவதும் ஒரே ரக கீரையைச் சாகுபடி செய்யக் கூடாது. பல வகைக்கீரைகளும் நமக்கு தேவை என்பதால், 5 அடி நீளம் கொண்ட பாத்திகளாகப் பிரித்துத் தேவைப்படும் கீரை விதைகளை விதைக்கலாம். கீரைகள் குறுகிய காலபயிர் என்பதால், மேலுரங்கள் எதுவும் கொடுக்கத் தேவையில்லை. ஏற்கெனவே கொடுத்துள்ள அடியுரங்களே போதுமானது. ஒரு நாள் விட்டு ஒருநாள் லேசான தண்ணீர்ப் பாசனம் மட்டும் கொடுத்தால் போதுமானது.
கீரை விவசாயத்துக்கு மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை ஏற்ற பருவமாகும். இந்த மாதங்களில் நிலவும் தட்பவெப்ப நிலை நல்ல மகசூலைக் கொடுக்கும். அதைத் தொடர்ந்து வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் வடகிழக்குப்பருவ மழை வரும் வாய்ப்பு உள்ளது. எனவே இந்த மழை மாதங்களில் கீரைத் தொட்டிகளில் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மழை வரும் அறிகுறி தென்பட்டதும். தார்பாலின், அல்லது பிளாஸ்டிக் படுதா பயன்படுத்தி மழை நீர் விழாமல் மூடி வைக்கலாம். மழை விட்டதும் அவசியம் தார்பாலினை அகற்ற வேண்டும். டிசம்பர், ஜனவரி மாதங்களில் கொட்டும் பனிப்பொழிவின் காரணமாக கருகல் நோய் வரும் வாய்ப்பு உள்ளது. இதைப் போக்க ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மில்லி வேப்பெண்ணெயுடன் சோப்பு நுரை கலந்து கீரை மீது மாலை நேரங்களில் தெளிக்க வேண்டும்.
தொடர்ந்து, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதக் கோடையில் ஏற்படும் வெப்பச் சூட்டில் கீரைகள் கருகிவிடும். இந்த மாதங்களில் அதை அறுவடைக்குக் கொண்டுவருவது ரொம்ப கடினம். சரியான பக்குவம் செய்தால் மட்டுமே மகசூலை எடுக்கமுடியும்.
கோடையில், பச்சை தென்னங்கீற்றுகளை வெட்டி வந்து நீளத்தொட்டிகளின் மேல் மூடிவைத்து விட்டால் போதும், வெயிலில் இருந்து கீரைகளைக் காப்பாற்றி விடலாம். மூடிய கீற்றுகளை மாலைவேளையில் அப்புறப்படுத்தி விட வேண்டும். காய்ந்த ஓலைக்கீற்றுக்களாக இருக்கும் பட்சத்தில், அதன் மீது தண்ணீரைத் தெளித்து ஈரப்படுத்திய பின்னர் கீரைத்தொட்டிப் பாத்திகளை மூடவேண்டும். இப்படியாக, மூன்று பருவங்களிலும் அதற்கு ஏற்ற பக்குவம் செய்து கீரைகளை வளர்த்தால்தான் நல்ல மகசூலை எடுக்க முடியும்.

No comments:

Post a Comment