Tuesday, February 28, 2017

Roof Farm-6


“தொட்டியில் மண்ணை நிரப்பி நாற்றை நட்டு தண்ணீர் ஊற்றுவதுடன் கடமை முடிந்ததாக நினைக்கும் பலரும், ‘பூ எடுக்கல. காய் அதிகம் பிடிக்கல’ எனப் புலம்புவதைக் கேட்கலாம். ‘நாம் கொடுத்தால் பயிர் நமக்குக் கொடுக்கும்’ என்பதுதான் பயிர்களுக்கான அடிப்படை. அதை மறந்துவிட்டு, ‘நான் எதையும் கொடுக்க மாட்டேன். நீ மட்டும் கொடு’ எனச் செடிகளிடம் கேட்பது எந்த வகையில் நியாயம் நண்பர்களே?

உரமிடு... உயிர்கொடு!
வேளைக்கு உணவு உண்டால்தானே நம்மால் சுறுசுறுப்பாகச் செயல்பட முடிகிறது. அதுபோலத்தான் பயிர்களுக்கும். அவற்றின் வளர்ச்சிக்குத் தேவையான உரங்களைக் கொடுத்தால்தான் மகசூல் கிடைக்கும்.
வீட்டுத்தோட்டப் பயிர்களுக்கு பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை ஆட்டு எரு, தொழுவுரம், செறிவூட்டிய மண்புழு உரம் ஆகியவற்றில் எதையாவது ஒரு தொட்டிக்கு 200 கிராம் வீதம் காய்ப்பு முடியும் வரை கொடுத்துவர வேண்டும். அப்போதுதான் நல்ல தரமான மகசூலை எடுக்க முடியும். மேலே சொன்ன இயற்கை உரங்களுடன் ஏதாவது ஓர் உயிர் உரத்தை 20 கிராம் அளவில் கலந்து கொள்ளலாம். இது, நுண்ணுயிரிகளை பல மடங்காகப் பெருக்கி, பயிருக்குத் தேவையான சத்துக்களை விரைவாக எடுத்துக் கொடுக்க உதவும்.
முட்டுக்கொடுக்க வேண்டும்!
தக்காளி, கொடிஅவரை, கத்திரி, மிளகாய் போன்ற செடிகள் வளரும்போது, காற்றின் வேகம் மற்றும் காய்களின் எடை போன்ற காரணங்களால் கிளைகள் ஒடிந்தும், தண்டு முறிந்தும் போய்விட வாய்ப்பு இருக்கிறது. எனவே காய் பிடித்தவுடன் குச்சிகளை ஊன்றி, அதில் செடிகளை இணைத்துக் கட்ட வேண்டும்.
சூட்டைத் தடுக்க மூடாக்கு!
வெயில் காலங்களில் செடிகளுக்கு ஊற்றும் தண்ணீரின் பெரும்பகுதி ஆவியாகி விடும். இதைத் தடுக்க... செடிகளின் வேர்பகுதிகளைச் சுற்றிலும் இலைகள், தென்னை மட்டைத்துகள் போன்ற மட்கும் பொருட்களைக் கொண்டு மூடாக்கு அமைக்கலாம். இது, தண்ணீர் ஆவியாவதைத் தடுப்பதுடன் களைகளையும் கட்டுப்படுத்தும். தவிர, இவை மட்கி உரமாகவும் மாறிவிடும்.
அதிகாலைப் பார்வை அவசியம்!
‘கேட்காத கடனும், பார்க்காத பயிரும் கைக்கு வந்து சேராது’ என்கிற பழமொழி வீட்டுத்தோட்டத்துக்கும் பொருந்தும். என்ன வேலை இருந்தாலும் அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பு எழுந்து, வீட்டுத்தோட்டத்தை ஒரு பார்வை பார்க்க வேண்டும். அப்போதுதான் புழு, பூச்சிகள் காலை வெயிலுக்காக இலைகள் மீது தவழ்ந்து திரிவதைக் காண முடியும். அவற்றை அப்படியே பிடித்து அழித்து அப்புறப்படுத்த வேண்டும்.
பால்கனியில் பறவைக்கூடு!
வீட்டுத்தோட்டத்தின் சில இடங்களில் அட்டைப்பெட்டி, மூங்கில் தூர் ஆகியவற்றை 10 அடி உயரத்தில் நிறுத்தி பறவைப்பரண் அல்லது பறவைக்கூடுகளை அமைக்கலாம். பரண் தளத்தின் மீது, பறவைகள் குடிக்க வாய் அகன்ற சிறிய பாத்திரத்தில் தண்ணீரும், ஒரு தட்டில் தீனியும் வைத்தால்... தேடிவரும் பறவைகள் தீனியோடு, செடிகளில் மேயும் புழுக்களையும் கபளீகரம் செய்துவிடும். புறநகர் பகுதிகளில் தோட்டம் அமைப்பவர்கள் இதைச் செய்தால் 70 சதவிகிதம் அளவுக்கு புழுக்களைக் கட்டுப்படுத்த முடியும்” என்ற கிருத்திகா கனகராஜ் நிறைவாக
சொத்தைக்காய், சுத்தக்காய்!
“என்னதான் பராமரிப்பு செய்தாலும் விளையும் காய்கள் சில சொத்தையாவது தவிர்க்கமுடியாத ஒன்று. அப்படிச் சொத்தையாகும் காய்களை வீண் என்று குப்பையில் கொட்டத் தேவையில்லை. சொத்தைக் காய்களும் சுத்தமானதுதான். சொத்தை உள்ள பகுதியை மட்டும் வெட்டி எறிந்து விட்டு அந்தக் காய்களைக் கழுவி சமைக்கலாம். அதுதான் மிகுந்த சுவை கொண்டது. எங்கள் வீட்டுத்தோட்டத்தில் எங்களுக்கு இரட்டை லாபமுண்டு. குறைந்தபட்சம் மாதம் ஆயிரம் ரூபாய் வரை ஏற்பட்ட காய்கறிச் செலவு மிச்சமாகிவிட்டது ஒரு லாபம். அதோடு நஞ்சில்லா காய்கறிகள் கிடைப்பதால், பின்னாளில் ஏற்படப்போகும் மருத்துவச்செலவும் மிச்சம்” என்றார்.
பால்கனியில் பசுமைக்குடில்! 
ஆண்டு முழுவதும் தரமான காய்கறிகளை வீட்டுத்தோட்டத்தில் முழுமையாக அறுவடை செய்ய முடியாது. குறிப்பாக, வெயில் கொளுத்தும் கோடை, அடைமழை, பனிக் காலங்களில் மகசூல் பாதிப்பு இருக்கும். இதைத் தடுக்க, மொட்டை மாடியில் பசுமைக்குடில் அமைக்கலாம். சந்தையில் கிடைக்கும் உபகரணங்களைக் கொண்டு குறைந்த செலவில் நாமே அமைத்து விடலாம். 10 அடி நீளம், 10 அடி அகலம், ஆறரை அடி உயரம் கொண்ட 100 சதுர அடி பரப்பில், சுமார் 30 பைகள் வைத்து, அதில் காய்கறிச் செடிகளை வளர்க்கலாம். . இது, வெளியில் இருந்து வரும் பூச்சிகளைத் தடுப்பதுடன், நீர் ஆவியாவதையும் கட்டுப்படுத்துகிறது. சீரான வளர்ச்சியைப் பெறுவதால் திறந்த வெளித்தொட்டிச் செடிகளை ஒப்பிடுகையில், பசுமைக்குடில் செடியில் நான்கு மடங்கு கூடுதல் மகசூல் கிடைக்கும்.

மஞ்சள் வண்ணம் மகசூல் திண்ணம்!
செடிகளில் ஏற்படும் ஆரம்ப கட்ட பூச்சித்தாக்குதலைக் கட்டுப்படுத்த... 5 கிலோ வேப்பிலையைக் கசக்கி, 10 லிட்டர் தண்ணீரில் 24 மணி நேரம் ஊற வைத்த கரைசலை செடிகளின் மீது தெளிக்கலாம். இது, அசுவிணி, சாறு ஊறிஞ்சும் பூச்சி போன்றவற்றைத் தடுக்கும்.
காய்ப்புழுத் தாக்குதலைக் கட்டுப்படுத்த... மிளகு, பூண்டு, இஞ்சி ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து, அரைத்து அரைப்பங்கு தண்ணீரில் கலந்து அதிகாலை அல்லது மாலை வேளைகளில் தெளிக்க வேண்டும்.
வடிகட்டிய காபித்தூளை செடிகளுக்கு உரமாக போட்டால், அந்த வாசம் பூச்சிகளை விரட்டுவதுடன் செடிகளுக்கு நல்ல உரமாகவும் விளங்கும். இலைகளை அரிக்கும் ஒருவகைப்பூச்சிகளால் பச்சையம் சுரண்டப்பட்டு இலைகள் வெளிர் மஞ்சள் நிறமாகி விடும். இதனால் ஒளிச்சேர்க்கை நடைபெறாது. செடிகளால் உணவு தயாரிக்க முடியாமல் வாடிப்போகும். இப்படி பாதிக்கப்பட்ட இலைகளின் மீது மிளகுத்தூளை லேசாக தூவினால் இந்தப்பிரச்னை சரியாகும்.

காய்கறிச் செடிகளுக்கு இடையில் சில தொட்டிகளில் மஞ்சள் நிறப்பூக்களைக் கொண்ட செண்டுமல்லிப்பூச் செடிகளை வைக்கவேண்டியது அவசியம். மஞ்சள் நிறத்துக்கு பூச்சிகளை ஈர்க்கும் தன்மை உண்டு. ஆங்காங்கே ஜொலிக்கும் செண்டுமல்லிப் பூக்களைத் தேடி வரும் பூச்சிகள் அதன் வண்ணத்திலும், வாசனையிலும் மயங்கி அந்தத் தொட்டிகளிலேயே தங்கிவிடும். பக்கத்தில் உள்ள காய்கறிச் செடிகளை சேதாரம் செய்யாது. இந்த வகையிலும் பூச்சித்தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.
மூலிகை இருந்தால், மருத்துவம் தேவையில்லை!
எட்டு மிளகு இருந்தால் எதிரி வீட்டிலும் சாப்பிடலாம்’ என்பது மூதாதையர் வாக்கு. ‘மனைக்குள் மூலிகை இருந்தால் மருத்துவம் தேவையில்லை’ என்று அதை மாற்றி சொல்லலாம். கீரை, காய்கறிகள், கிழங்குகளோடு மூலிகைகளையும் வீட்டுத்தோட்டத்தில் பயிர் செய்துவருகிறார்கள் கிருத்திகா கனகராஜ் தம்பதி. குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஏற்படும் சிறு சிறு உடல் உபாதைகளுக்கு முதல் உதவி மருத்துவத் தேவைக்காக கைகொடுப்பது தோட்டத்தில் வளர்ந்து வரும் மூலிகைச் செடிகளே. இந்த மூலிகைகள் பற்றியும், அதன் மருத்துவ குணங்களை பற்றியும் பேசினார்கள்.
“தூதுவளை, நிலவேம்பு, சோற்றுக்கற்றாழை, பிரண்டை, வெற்றிலைனு தொட்டிக்கு ஒரு செடி வீதம் வளத்துட்டு வர்றோம். சளி, தொண்டை சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்துறதுக்கு இத பயன்படுத்துறோம். இவையெல்லாம் 6 அடி உயரம் வரை வளரக்கூடிய ஒருவகையான தாவரங்கள். கொடிகளை வெட்டி அப்படியே நடவு செய்யலாம். நடவு போட்டு 45-வது நாளில் இதன் இலைகளை பயன்படுத்தலாம். இலைகளை ரசம் வைத்து சாப்பிட்டாலும், அதன் மருத்துவ குணங்கள் கிடைக்கும்’’என்றனர்.

(Thanks Vikatan)

No comments:

Post a Comment