Tuesday, February 28, 2017

Roof Farm-5


வீடுகளில் காய்கறி வளர்ப்பை ஊக்குவிக்கும்விதமாக, தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் நகர்ப்புற காய்கறி அபிவிருத்தித் திட்டம் பற்றி கடந்த இதழில் பார்த்தோம். அந்தத் திட்டத்தின் மூலமாக பலனடைந்த கோயம்புத்தூர் லட்சுமி மில்ஸ் பகுதியைச் சேர்ந்த கிருத்திகா கனகராஜ், தனது அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்கிறார்.

‘‘எனக்குச் சொந்த ஊரே கோயம்புத்தூருதான். கணவர் கனகராஜ் போட்டோ ஸ்டூடியோ வெச்சிருக்கார். நான் வீட்டைப் பார்த்துக்கிறேன். நகர்ப்புற காய்கறி அபிவிருத்தித் திட்டம் பத்தி தகவல் தெரிஞ்சு உடனே, முறைப்படி விண்ணப்பம் கொடுத்தேன். என்னைத் தேர்வு செஞ்சு மாடித்தோட்டம் அமைச்சுக் கொடுத்தாங்க. இப்ப ஒரு வருஷம் ஆச்சு. வீட்டுக்குத் தேவையான பெரும்பாலான காய்கறிகளை மாடியில் இருந்துதான் பறிச்சுக்கிறேன்’’ என்றவர், வீட்டுத்தோட்டம் அமைக்கும் தொழில்நுட்பங்களை ஆர்வமாக அடுக்கினார். அவரின் அனுபவம், இங்கே பாடமாக விரிகிறது.

உடனே விதைக்கக் கூடாது!
“வீட்டுத்தோட்டம் அமைக்கத் தேவையான பொருட்கள் அத்தனையையும் தோட்டக்கலைத்துறை ஒரு தொகுப்பாக (கிட்) கொடுக்கிறது. இதில்  1. தென்னைநார் கழிவு கட்டி 2 கிலோ 2. யு.வி கதிர்கள் தாங்கக்கூடிய பாலிதீன் பை - 20 3. பாலிதீன் விரிப்பு (4மீX4மீ) - 1. 4. உயிர் உரங்கள் - 2 பை. 5. உயிர் பூஞ்சண கொல்லி - 2 பை. 6. இயற்கை வேம்புப் பூச்சிக் கொல்லி - 250மி.லி.  7. கைத்தெளிப்பான் - 1. 8. பூவாளி-1. 9. முள்கரண்டி - 1 . 10. மண்அள்ளும் கரண்டி - 1 . 11. குழித்தட்டு - 1 12. நீரில் கரையும் உரம் (19:19:19:) - 2 கிலோ 13. செயல்முறை விளக்கக் கையேடு ஆகியவை தொகுப்பில் இருக்கும்.
முதலில் தென்னை நார்க்கழிவு (காயர் பித்) கட்டிகள் மீது சொதசொதப்பு ஏற்படும்படி தண்ணீர் தெளிக்க வேண்டும். தொடர்ந்து 10 நிமிடங்களில் தென்னை நார்க்கழிவுக் கட்டியானது நான்கு முதல் ஐந்து பங்காக அதிகரிக்கும். அதோடு தொழுவுரம் அல்லது ஆட்டு எரு ஒரு கிலோவை கலந்து கொள்ள வேண்டும் (இந்த இடுபொருட்களை  நாம்தான் வெளியில் வாங்கவேண்டும்). விதைக்கும் பையின் பக்கவாட்டில் கோணி ஊசி உட்புகும் அளவில் நான்கு துவாரங்களைப் போட்டுக் கொள்ள வேண்டும். தொடர்ந்து பைகளில் ஊட்டமேற்றிய கலவையை நிரப்ப வேண்டும். பைகளின் உயரத்தில் ஓர் அங்குலம் காலியாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். கலவை நிரப்பப்பட்ட பைகளில் உடனே விதையிடாமல், குறைந்தபட்சம் 7 நாட்கள் வைத்திருக்க வேண்டும். ஏழு நாட்களில் தென்னை நார்க்கழிவானது, காபித்தூள் நிறத்துக்கு மாறிவிடும். இதுதான் விதையிட ஏற்ற தருணம். இருபது பைகளிலும் பகிர்ந்து விதைப்பது நல்லது.
கத்திரி, மிளகாய், தக்காளி ஆகியவற்றை நாற்றங்கால் முறையில்தான் வளர்க்க வேண்டும். வீடுகளில் நாற்று உற்பத்தி செய்வதற்கு வசதியாக குழித்தட்டு முறை என்ற எளிமையான தொழில்நுட்பம் ஒன்றை தோட்டக்கலைத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முறையில் வீட்டுத் தோட்டத்துக்கு மட்டுமல்ல, பல ஏக்கர் விவசாய சாகுபடிக்குத் தேவையான நாற்றுகளையும் குறைந்த இடத்தில் உற்பத்தி செய்து கொள்ள முடியும்.
பகிர்ந்து பயிரிடு!
20 பைகளிலும் ஒரே ரகத்தைப் பயிரிடக்கூடாது. காய்கறிகள், கீரை, கிழங்கு... என்று பலவித பயிர்களை வளர்க்கும்போதுதான் சரிவிகித காய்கறி உணவு கிடைக்கும். அதன் அடிப்படையில் கத்திரி, தக்காளி ஆகிய இரண்டு செடிகளையும் தலா 3 பைகளில் நடவு செய்யலாம். மிளகாய்ச் செடியை ஒரு பையில் வளர்க்கலாம். இதில் கத்திரி, மிளகாய் ஆகியவற்றின் மொத்த சாகுபடிக் காலம் 6 மாதங்கள். தக்காளியின் ஆயுட்காலம் 150 நாட்கள். இந்த மகசூல் காலம் முடிந்ததும் சுத்தமான இடத்தில் பைகளைக் கொட்டி காலிசெய்து... கொட்டப்பட்ட கலவையின் ஈரப்பதம் காய்ந்த பிறகு மீண்டும் அந்த மண்கலவையுடன், தொழுவுரம், மண்புழு உரம் மற்றும் நுண்ணுயிர் உரங்களை முதலில் சொன்ன அளவில் கலந்து பைகளில் நிரப்பி மீண்டும் நடவு செய்யலாம். இந்த மறுசுழற்சிமுறையில் செடிகள் தொடர்ந்து சிறப்பான மகசூலைக் கொடுக்கும். நாற்றங்கால் செடிகளை பைக்கு ஒரு நாற்று வீதம் நடவு செய்ய வேண்டும்.
நேர்த்தியாக செய்ய வேண்டும் நேரடி விதைப்பு!
நேரடி விதைப்புப் பயிர்களான வெண்டை, கொத்தவரை, செடி அவரை ஆகியவற்றின் விதைகளை பைக்கு நான்கு வீதம் ஊன்ற வேண்டும். 130 நாள் பயிர்களான இவற்றில், வெண்டை விதையை 3 பைகளிலும் மற்ற இரண்டு செடிகளை தலா இரண்டு பைகளிலும் விதைக்க வேண்டும். 30 நாட்களில் பலன் தரக்கூடிய குறுகிய காலப்பயிர்களான முள்ளங்கி, கீரை, கொத்தமல்லி ஆகிய மூன்றையும் தலா 2 பைகளில் விதைக்கலாம். விதையின் அளவைவிட இரண்டரை மடங்கு ஆழத்தில் விதைகளை ஊன்ற வேண்டும். விதை ஊன்றியதும் அதே மண் கொண்டு மூட வேண்டும். கீரை விதைப்பைப் பொறுத்தமட்டில், ஒரு தேக்கரண்டி விதையுடன், இரண்டு பங்கு சலித்த மணல் அல்லது உயிர் உரத்தைக் கலந்து பைகளில் தூவி விடவேண்டும். தொடர்ந்து பழைய செய்தித்தாள் ஒன்றை விரித்து கீரை விதைத்த பையினை மூடிவைக்கவேண்டும். பின்னர் பூவாளி கொண்டு நீர் தெளிக்கவேண்டும். விதைகள் முளைக்கத் தொடங்கியவுடன் தாளை அப்புறப்படுத்தி விடலாம்.
நீர் மேலாண்மை!
பைகளின் தன்மை, பருவநிலை, பயிரின் வளர்ச்சி இவற்றை மனதில் கொண்டு தண்ணீர் தெளிக்க வேண்டும். கோடை காலம் எனில் ஒரு நாளைக்கு இரண்டு முறை நீர் தெளிக்க வேண்டும். தேங்காய் நார்க்கழிவானது, இயற்கையில் நீரைத் தக்க வைக்கும் தன்மை கொண்டது. அதனால், கோடை காலம் தவிர மற்ற நாட்களில் ஒரு முறை தண்ணீர் தெளித்தாலே போதுமானது. காய்ச்சலும் பாய்ச்சலுமான பாசனம்தான் சிறந்தது. தொட்டி முறை விவசாயத்தில் அதிகப்படியான நீரை ஊற்றக் கூடாது. அதிகப்படியான நீர் மண்ணில் உள்ள சத்துக்களை வெளியேற்றுவதுடன், பூஞ்சண நோய்க்கு வாய்ப்பை ஏற்படுத்திவிடும்.
காய்ந்த குச்சி ஒன்றை எடுத்து பைகளில் உள்ள மண் கலவையினுள் குத்திப்பார்க்க வேண்டும். பைகளில் உள்ள கலவையின் துகள்கள் குச்சியில் ஒட்டினால் தண்ணீர் ஊற்றத் தேவையில்லை. போதிய ஈரப்பதம் உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். அப்படி மண்துகள் குச்சியில் ஒட்டாத பட்சத்தில் செடிகளுக்கு நீர் தெளிக்கலாம்.
உர மேலாண்மை, மூலிகை வளர்ப்பு, பால்கனியில் பசுமைக்குடில் விவசாயம் மற்றும் வீட்டுத்தோட்டத்தில் தான் பெற்ற லாபம் ஆகியவை குறித்து கிருத்திகா கனகராஜ் பகிர்ந்துகொண்ட தகவல்கள் அடுத்த இதழில்...

(Thanks Vikatan)

No comments:

Post a Comment